சின்னச் சின்ன அனுபவங்களின் கர்த்தர்.

சின்னச் சின்ன
குட்டிக் குட்டி
இன்பங்களில் நான்
திருப்தியாகிட
வரம் தா இறைவா.
அது தானே உன் பார்வையில் பெரியது?

நெரிசல் இல்லாமல்
மெர்சல் பார்த்துக் கொண்டு
பேருந்தில் சென்னை வரை
படுத்துப் பயணம்
என்பது சில காலத்துக்கு முன்பு வரை
கனவு தானே!
அந்தக் கனவு நனவானது சின்னப் பாக்கியம்.

ஓலா அனுப்பி வைத்த நண்பன்
ஏசியிலேயே வீட்டில் ட்ராப்
ஓசிப் பயணம், ஓலா மனி.
இன்னொரு பாக்கியம்.

அவன் மகளின் நிற்காப் புன்னகை
மனதில் எழுப்பும் ஆனந்தம்.
நடக்கத் துவங்காவிட்டாலும்
அப்பாவின் விரல்களைப் பிடித்துக்
கொண்டு தொங்கும் அந்தப் பாப்பா,
பார்க்கவே பரவசம்.

பாண்டிச்சேரிக்காரனா இருந்தா
சரக்கு தான் வாங்கிட்டு வந்திருப்பேனோ
நெல்லை அல்வாவுடன் என்
மொக்கை ஜோக்கையும் ரசித்த
நண்பனின் சிரிப்பு
சின்னதென்றாலும் பெரிய சிலாக்கியம்.

திட்டமிட்ட கூடுகைக்கு
வராமல் போனவர்கள் பற்றி
முணுமுணுக்காமல்
இனி என்ன செய்வதென்று
வந்த நால்வரும் வகுத்த திட்டங்கள்
சின்னதாயிருந்தாலும்
வருங்கால பாதிப்பு பெரிது என்ற
நம்பிக்கை, பெரிது.

காத்திருந்த நேரத்தில் அந்த பரந்து விரிந்த
ஹை டெஃபனிஷன் திரையில் பழையதும்
புதியதுமாக க்ரஹாம் கென்ட்ரிக்கின்
பாடல்களைப் பார்த்தும் கேட்டும்
ரசித்தது…
இம்மி தந்த புதிய கென்ட்ரிக்கின்
ஆடியோ ஆல்பம்…
சிறிய அனுபவம் தரும்
பெரிய மகிழ்ச்சிகள்.

காலை முட்டை தோசை,
துணையாக இரு சாதா தோசைகள்…
மதியம் சோறு…
இரவு தக்காளி தொக்குடன்
சாலமோன் சுட்டுத் தந்த தோசைகள்.
அதற்கு முன் பங்கு கொடுக்காமல்
எனக்கே எனக்கு கிடைத்த
ஒரு பாக்கெட் முறுக்கு.

காலை ஆராதனையில்
ஆசிஃபாவுக்காக ஒரு துளி
கண்ணீருடன் மன்றாடினாலும்
சிறப்பான அருளுரையைக் கேட்டு
புதிய நண்பர்களை சந்திக்க,
சில சீரியல் பல்புகள் வாங்கக்
கிடைத்த வாய்ப்புகள்…

அங்கிள் எனக்கு பேரன் பிறந்திருக்கிறான்
என்று சொல்லி எனக்கு இனிப்பு தந்த பெண்மணி…

தம்பி இது உங்க அப்பாவா, உடன் நின்று கொண்டிருந்த
சாலொமோனிடம் கேட்ட பெண்…

அண்ணே எல்லாரும் எனக்கு கல்யாணம் ஆகி
பிள்ளை இருக்குதுன்னு சொன்னா
நம்ப மாட்டேங்கிறாங்க… கடுப்பேற்றும் சாலமோன்…

உங்க வெட்டிங் டேயையும் எழுதுங்க,
ஃபாலோ அப் நோட்டில் எழுதும் போது அந்த
இளைஞி சொல்ல,
நான் சிங்கிள் தான் என நான் பதிலளிக்க…
அப்போ பர்த் டே மட்டும் போதும்…

ரசிக்கத் தூண்டும், புன்முறுவலிக்கச் செய்யும்
சீரியல் பல்புகள்…

சின்னச் சின்ன அனுபவங்களால்
வாழ்வை சுவையூட்டும் கர்த்தரே
கொசுவை வடிகட்டி
ஒட்டகத்தை விழுங்காமல்
பறவைகள், காகங்கள், காட்டுப் பூக்கள்,
உரை மோர், கடுகு விதை…
போன்றவற்றைக் கூர்ந்து பார்க்க,
அமர்ந்து தியானிக்க,
ரசித்து அனுபவிக்க
தொடர்ந்து உன் அருள் தாரும்.

ஆராதனைக்குப் பின் கிடைத்த
மசாலா பால்,
இளைஞர்களுடன் உரையாடக் கிடைத்த
நல்ல நேரம், நல்ல தலைப்பு…
ஸ்பெஷல் தோசை…
ஒரு மணி நேர பைக் பயணம்…

வயிறு வலிக்க,
வாய்விட்டு,
உடல் குலுங்க,
கண்ணீர் வடிய
சிரிக்க… இன்பன் இருந்தால் போதும்.

இன்பன் வீட்டில் மதியக் கூடுகை,
மதிய உணவுக்குப் பின்…
சமையலுக்கு மனைவியரை அனுப்பிவிட்டு
குழந்தைகளுடன் விளையாடும் இன்பனும் தீபக்கும்,
மதிய உணவுடன் இரண்டாம் ஆம்லெட்
அருகிலேயே இருந்துவிட்ட அப்பள டப்பா…

சின்னதா? பெரியதா? அந்த மகத்தான
மகிழ்வான அனுபவங்கள்?
அளவை விட அடர்த்தி தானே முக்கியம்?

எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய்,
பொறி உருண்டை, மக்ரூன்…
தேநீர், சிறிது பைபிள்,
சிறிது நாட்டு நடப்பு,
சிறிது நடைமுறைக் கிறிஸ்தவம்…

ஒரு வருடத்துக்கு முன் நான் எழுதிக் கொடுத்த
கதையை செல்லம் போலச் சொன்ன
மைக்கேல் ஜோவன்…
நடுவில் துரு துருவென்று செல்லத் தொந்தரவு
செய்த ஐரின்…
புன்னகையால் தொடர் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்த
ஹாலி என்ற ஸ்மைலி.

கதை சொல்லியைப் படம்பிடித்த சாலமோன்,
சூடான இட்லி,
எச்சில் இன்பா என்று அப்பாவின் ஈர முத்தங்களுக்கான
பட்டப் பெயரை அம்பலத்தில் வெளிப்படுத்திய செல்லக்குட்டி.
என்னைப் போல மாறு தேவராஜ்யம் போகலாம் என்று
அருளுரை சொன்ன குட்டிப் போதகி.

திரும்பவும் ஒரு மணி நேர பைக் ரைட்…
கதிரவன் இல்லா இரவும் பயணத்துக்கு
ஏற்ற பாக்கியம் தானே?

தலை சாய்க்கவும், காலுக்கு வைக்கவும்
தலையணைகளுடன் தடங்கல் இல்லா
நித்திரை.
அலுவலகம் சென்ற தற்காலிக பிரம்மச்சாரி
ஆயத்தம் செய்து வைத்திருந்த காலை உணவு…
தாயுமானவனாகி உபசரிக்கும் நண்பர்கள்
பெரும் சிலாக்கியம் தான்.

அதிகாலை வரை பணியில் இருந்திருந்தாலும்
மதியம் என்னை முகம் மலர வரவேற்று
என் கடிபட்ட ஆப்பிள்களுக்கு வைத்தியம்
பார்த்த எடிட்டர் ஃப்ரான்சிஸ்…
இடையிடையே வந்து மதிமுகம் காட்டிச் சென்ற
குட்டிப் பாப்பா…

அண்ணே உங்க கூட பேசணும் என்று
ஒரு நாளை ஒதுக்க வைத்து
அந்த நாளில் வராமல் போன
செல்வாவின் தாமதம்…
செல்வா முன்பதிவு செய்து அனுப்பிய
பயணச் சீட்டு…
எனக்காக நாலு நிமிடங்கள்
தாமதித்துக் கிளம்பிய நெல்லை எக்ஸ்ப்ரஸ்…
அவசரத்திலும் தண்ணீர் பாட்டில் வாங்கக்
கிடைத்த சந்தர்ப்பம்…
பலவித சிந்தனைகளுடன் நகர்ந்த
நித்திரைப் பயணம்.
இயற்கையின் அழைப்புக்குப் பதில் சொல்ல
அருகிலேயே உடன் வரும் பயோ கழிவறை.
நெல்லைக் கதகதப்பை காலையிலேயே
உணர்ந்த தருணம்…
அம்மாவின் இழப்பு தெரியாமல்
இரட்டை அம்மாக்களாக இருக்கும் தங்கைகள்
உப்புமா தந்த இளைய தங்கை,

மூத்த தங்கையின் பேரன்,
கையடக்கப் பொடியன்,
ஃபியான் மைக்கேல்
அவன் முக பாவங்களைப்
பதிவு செய்ய அருகிலிருந்த
கேமரா…
அதை வாங்கிக் கொடுத்த இரு நண்பர்கள் பற்றிய
நன்றியுள்ள நினைவுகள்…
நீ எழுதுடா என்று
அடிக்கடி செலவுகளைக் கவனித்துக் கொள்ளும்
நண்பர்கள்..

இதை எழுத உந்துதல் தந்த
லிட்டில் திங்க்ஸ் என்னும்
டேவ் ஹன்ட் இன் பாடல்
அவரை எனக்கு அறிமுகம் செய்த
தோழி ஷனாரா…
நண்பர்கள் பற்றிய நினைவுகள்…
நண்பர்கள் பலரை பெற்றுத் தந்த
திருச்சி…
திருச்சி YFC நாட்கள்…
மலரும்,
கனியும்
நினைவுகள்.

இதற்கு மேலும் பெரிதாக என்ன வேண்டும்?
சின்னச் சின்ன அற்புதங்களில்,
அனுபவங்களில்,
உணர்வுகளில்,
சிந்தனைகளில்,
நினைவுகளில்,
திருப்தியடைய
அருள் தா இறைவா.

மாபெரும் அண்ட சராசரங்களையும்
ஒரு சொல்லால் உருவாக்கிய
சர்வ வல்லவரே
திகைக்கச் செய்யும் மகத்துவமானவரே.
சிறு சிறு இன்பங்களால்
திக்குமுக்காடச் செய்யும் அன்பான கர்த்தரே,
மகிழ்வுடன் உம்மைப்
போற்றுவேன்,
நன்றி சொல்வேன்
நீர் தரும் சின்னச் சின்ன
அனுபவங்களுக்காக.
அவற்றை அலட்சியம் செய்யாமல்
அற்புதங்களாக எடுத்துக் கொள்ள
எப்போதும் நன்றி உணர்வுடன் இருக்க
அருள் தாரும் இறைவா.

நான் தமிழ்ப்படுத்திய என் நண்பனின் கதை

ஒவ்வொரு நாளும் நான் என் மானிட்டரின் முன் உட்காரும் போதும் ஜி டாக்கிலிருந்து வந்து
”ஹாய் குட் மார்னிங்  have a gr8 day” என்று சொல்லும் ஒரு பாப் அப். அதைப்பார்த்ததும் என்                             முகத்தில் பூக்கும் புன்முறுவல்.

நான் நேரில் பார்த்திராத அவள் ஒரு சின்ன கம்பெனியில் வேலை செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். காலப்போக்கில் நல்ல நண்பர்களானோம் நாங்கள். எப்போதெல்லாம் நான் பிரச்சனையுடன்                         யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேனோ அப்போதெல்லாம் அதைப் பகிர்ந்து கொள்ள                   நான் தேர்ந்தெடுப்பது அவளைத் தான் ஏனென்றால் அவள் எப்போதுமே ஆன் லைனில் இருந்து தான்                  வேலை செய்து கொண்டிருப்பாள்.

எப்போதுமே ”டோண்ட் ஒர்ரி நான் ப்ரே பண்ணிக்கிறேன்” என்று பதில் தருவாள்.

அந்த ஒரு வரி என்னைச் சரியாக்கிவிடும்.

பிரச்சனை முடிந்ததும் சொல்வாள், “நான் சொன்னேன் இல்லையா பிரச்சனை சரியாயிடும்னு?” என்பாள்.

நாட்கள் கடந்தன… சில நாட்களாகவே ஜி டாக், பாப் அப்புகள் என் மானிட்டரில் முளைப்பதில்லை,                  குறிப்பாக அவளுடையது.

ஒரு வாரத்துக்குப் பின் காரணம் கேட்டு நான் அனுப்பிய என் மெயில் பதில் கொண்டுவரவில்லை.

சில நாட்களுக்குப் பின் மீண்டும் அவளது வரி பாப் அப்பானது. “hi good morning  have a gr8 day”

மகிழ்ந்தேன்… ”ஏன் இத்தனை மவுனம்” என்றேன்.

”வேலையிலிருந்து தூக்கிட்டாங்க” என்றாள்

”என்ன ஆச்சு” ஊமையாகிப் போன நான் கேட்டேன்.

“வழக்கம் போல வேலையைச் செஞ்சுட்டு இருந்தேன். வெளியே போக வழியக் காட்டினார் மானேஜர்” என்றாள்.

பதில் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

” r u there”. என்றாள்.

பாரமான இருதயத்துடன் என் இடது கை சுட்டு விரலால் “s” சொன்னேன்.

“கடவுள் கைவிட மாட்டார்னு எனக்குத் தெரியும். விலகவும் மாட்டார். இப்போ வேலை தேடிட்டுத் தான் ஆன்லைன்ல இருக்கேன்” என்றாள்.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு…

”டோண்ட் ஒர்ரி நான் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்” என்றேன்.

அவள் ஸ்மைலி மூலம் சிரித்தாள்.

நான் அழுதேன்.

எட்வினா கார்த்திகா ராஜ்குமார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னால அய்யா!

(என் நண்பர் Bob Clements அவர்களது அனுமதியுடன் இதை தமிழாக்கியிருக்கிறேன். அனுமதியில்லாமல் உபயோகிக்காதீர்கள். அவர் பெரிய எழுத்தாளர் காப்பி ரைட் எல்லாம் வைத்திருப்பார். கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் அவரது இணையத்தில் இன்னும் அதிக படைப்புக்களைப் பாருங்கள்)

பொதுத் தேர்தல் பற்றி அறிவிப்புகள் இப்போது தான் வந்திருக்கின்றன. ஒலி பெருக்கிகளின் கூச்சல்களும், குழப்பமான குரல்களும் சத்தமாக ஒலிக்கப் போகின்றன. நான் என் வீட்டு ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்து எழுதத் துவங்கும் போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. நான் எரிச்சலுடன் ஏறிட்டுப் பார்த்தேன். மணி திரும்பவும் ஒலித்தது, பொறுமையாக இன்னும் சத்தமாக. கோபத்துடன் கதவை நோக்கி நடந்தேன். திறந்தால் இளித்துக் கொண்டிருந்த ஒரு முகம் கைகளைக் கூப்பிக் கொண்டிருந்தது.

“வணக்கம் அய்யா” இளிக்கும் முகம் என் கைகளைக் குலுக்கவும் என்னைத் தாண்டி வீட்டுக்குள் போகவும் முயற்சி செய்து கொண்டே சொன்னது, “நான் உள்ளே வரலாமா?”.

“வேண்டாம்! உங்கள எனக்குத் தெரியாது” என்றேன் நான்.

“என்னை உங்களுக்குத் தெரியும் அய்யா” அகலமான இளிப்புள்ள முகம் என்னைக் கட்டிப்பிடிப்பதற்காக கைகளை நீட்டியது.

“இல்ல எனக்குத் தெரியாது”

“உங்களுக்குத் தெரியும்”

“இல்ல எனக்குத் தெரியாது”

“அஞ்சு வருசத்துக்கு முன்னால நாம சந்திச்சிருக்கோம் அய்யா”

“எங்கே?”

“இங்கேயே தான் அய்யா”

“இங்கேயா?”

“ஆமா அய்யா”

“இங்க எதுக்கு சந்திச்சோம்?”

“உங்க கிட்ட ஓட்டுக் கேக்க வந்தேன் அய்யா”

“ஓஹோ, நீங்க…?”

“பாரளுமன்றத்துல உங்களோட குரல் நான் தான் அய்யா. இப்போ நான் உள்ள வரலாமா?”

“கூடாது”

“ஏன் அய்யா?”

“உங்களப் பாக்க நான் எத்தன தடவ வந்தேன் அப்படிங்கறது உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது அய்யா”

“அப்ப எல்லாம் உங்களுக்கு நேரம் இல்ல. நீங்க எப்பவுமே பிசியா இருந்தீங்க, ரெம்ப பிசி. உங்க ஆளுங்க என்னத் துரத்தி விட்டாங்க. உங்க ஆஃபீசுக்கு வெளியில அடியாள்கள் நின்னுக்கிட்டு கேலி பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா? கண்டிப்பா உங்களப் பாக்கணும்னு வற்புறுத்துனப்போ அவங்க என்ன கிட்டத்தட்ட அடிக்கவே செஞ்சுட்டாங்க”

“எதுக்காக என்னப் பாக்க வந்தீங்க அய்யா?”

“ஊரு முழுசும் ரோடு ரிப்பேர் ஆகிக் கிடக்குது. எங்க ஏரியாவுல எங்க குழாயத் தவிர எல்லா எடத்துலயும் தண்ணி வருது. ஒவ்வொரு நாளும் அடிதடி அதிகமாயிட்டே வருது. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“எழுதிட்டு இருக்கேன் அய்யா”

“இப்பவா?”

“நீங்க எனக்கு ஓட்டுப் போட்டீங்கன்னா நான் எல்லாத்தையும் செய்துடுவேன் அய்யா”

“இதத் தானே போன தடவையும் சொன்னீங்க?”

“அப்படியா அய்யா? நிறைய மக்கள் கிட்ட நான் பேசறதால எல்லாம் ஞாபகத்துல இருக்கறதில்ல அய்யா”

“ரோடு எல்லாம் சரி பண்ணுவீங்களா?”

“உங்க ஓட்டு தான் அதுக்கு உத்தரவாதம்”

“தண்ணி வருமா?”

“என்னோட சின்னம் வாழை இலை அய்யா”

“குப்பைத் தொட்டிய எல்லாம் சுத்தம் பண்ணுவீங்களா?”

“இது தான் உங்க பூத் நம்பர் அய்யா”

“எல்லாத்தையும் எழுதிக்கிட்டீங்களா?”

“எல்லாத்தையும் எழுதல அய்யா: நாலாம் வகுப்பு வரைக்கும் நாங்க மெதுவாத்தான் எழுதிப் படிச்சோம் அய்யா”

“அப்படின்னா எல்லாத்தையும் எப்படி ஞாபகத்துல வச்சிருப்பீங்க?”

“தேர்தல் முடிஞ்சதும் என்னோட ஆஃபீசுக்கு வாங்க அய்யா”

“ஆனா என்னப் பாக்கறதுக்கு உங்களுக்கு நேரமே இருக்காதே?”

“அப்படின்னா நானே உங்களப் பாக்க வர்றேன் அய்யா”

“எப்போ?”

“அடுத்த தேர்தலுக்கு முன்னால அய்யா”

http://www.bobsbanter.com/indian-political-satire/before-the-next-election-sir/